Saturday, March 15, 2008

பணக்கார மனைவியின் ஏழைக் கணவர்

பணக்கார மனைவியின் ஏழைக் கணவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் டி.கே. ரங்கராஜன். இவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன் கைவசம் இருக்கும் தொகை வெறும் 700 ரூபாய்தான் என்றும் வங்கிக் கணக்கிலும் சிறிதளவு மட்டுமே உள்ளது என்றும் கணக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி பெயரில் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துகள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளார்.
முழுநேர அரசியல்வாதியான ரங்கராஜன் இதுவரை எம்எல்ஏ, எம்பி பதவிகள் வகித்ததில்லை. சிலமுறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அவரது மனைவி என்ன செய்கிறார் என்றும் தெரியவில்லை.
ஆனால் அவரிடம் 90 பவுன் தங்கமும், ஒன்றரை கிலோ வெள்ளியும், வங்கிகளிலம் பல ஆயிரங்களும் உள்ளன. பணக்கார மனைவி ஏழைக் கணவர். என்னே வினோதம்

Wednesday, January 2, 2008

கலாசாரமா? காட்டுமிராண்டித்தனமா?


மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுவது நாகரீகம் என்று பலரும் வக்காலத்து வாங்கி வரும் நிலையில் சமீப காலமாக நிகழும் சம்பவங்கள் அநாகரீகமானது மட்டுமல்ல. காட்டுமிராண்டித்தனமானதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 1ந் தேதி கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பலரும் மதுபானம் அருந்தி உற்சாக நடனமாடியபோது மேடை சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்க எண்ணி இவர்கள் நடத்திய கொண்டாட்டம் அவர்களது புத்தாண்டு தொடக்கத்தை சோகமாக மாற்றி விட்டது.

இந்த சம்பவத்தை மிஞ்சும் வகையில் மும்பையில் நிகழ்ந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு பெண்கள் காமக் கொடூரர்களால் மானபங்கப்படுத்தப் பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை கொண்டாடி விட்டு இரண்டு பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் இருவருடன் நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு வெளியே வந்தனர்.அங்கிருந்து அவர்கள் மும்பையில் உள்ள ஜூகு பீச் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் அந்த இரண்டு பெண்களையும் கேலி செய்தபடி சில்மிஷம் செய்ய தொடங்கி உள்ளனர்.உடனே ஒரு பெண் கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அதற்குள் கூட்டம் இரண்டு மடங்காக அதிகரித்தது.அனைவரும் அந்த பெண்களை இழுத்துச் சென்று கும்பலாக மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.


அந்த கும்பல் ஒரு பெண் அணிந்திருந்த கருப்பு நிற ஆடையை கிழித்தது.கும்பலில் இருந்தவர்கள் தள்ளி விட்டதில் அந்த பெண் கீழே விழுந்தார். உடனே அவர் மீது சிலர் வேண்டுமென்றே விழுந்துள்ளனர்.

இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் சம்பவத்தை பார்த்து திடுக்கிட்டார்.

உடனடியாக அந்த வழியாக சென்ற போலீஸ் வேன் ஒன்றை நிறுத்தி புகார் செய்துள்ளார்.போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அங்கு சென்று அநாகரீகமான செயலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போலீஸ் காரரையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் காமவெறியுடன் செயல்பட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்த காவல் துறை இன்ஸ்பெக்டர் அமர்ஜீத் சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள புகழ் பெற்ற "கேட் வே ஆப் இந்தியா' பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒரு பெண் மானபங்கப் படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.


ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அநாகரீகமான, காட்டுமிராண்டித் தனமான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருப்பது பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டின் உயரிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களிடையே கவலையை அதிகரிக்க செய்துள்ளது.

http://www.maalaisudar.com/newsindex.php?id=7233%20&%20section=20

Wednesday, December 26, 2007

குறும்படங்களுக்கு எதிர்காலம்

சீறிப்பாய்ந்தும் பறந்து பறந்தும் சண்டை போடும் ஹீரோ, மரங்களை சுற்றிச் சுற்றி வந்து அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடும் கதாநாயகி என நமது பொன்னான நேரத்தில் இரண்டரை மணி நேரத்தை சுரண்டித் தின்னும் திரைப்படங்கள் போரடித்துவிட்டதா?

ஒரே கதையை மாற்றி மாற்றி சொல்லி வரும் வழக்கமான மசாலாப் படங்களில் இருந்து விடுதலையே கிடையாதா என்ற ஏக்கத்திற்கு தீர்வு கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரே ரீலில் கதை சொல்லும் குறும்படங்கள் விரைவில் படையெடுக்கப் போகிறது. இதற்கு புண்ணியம் கட்டிக் கொள்ள முன்வந்திருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

திரைப்படத் துறையில் பல புதுமைகளை புகுத்தி வரும் இத்திரைப்பட நிறுவனம் இதுபோன்ற ஒரு ரீல் திரைப்படங்களை தயாரிக்க நிதி கொடுப்பதோடு உலகம் முழுவதும் செயற்கைக் கோள் மூலம் அவற்றை திரையரங்குகளில் திரையிடவும் முன்வந்துள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக எழுத்தாளர் ஞானியின் 6 குறும்படங்களை அந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஞானி (அவரைப் பற்றி எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் உண்டு என்ற போதிலும் நிச்சயம் அவர் சமூக அக்கறை கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை) இயக்கத்தில் ஆறு குறும்படங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.

இதுபோன்ற குறும்படங்களை உருவாக்க ஷங்கரைப் போலவோ மணிரத்தினத்தைப் போலவோ பெரிய தொழில்நுட்ப ஞானம் எதுவும் தேவையில்லை. மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்துக்களும் அதை சுவாரஸ்யத்துடன் சொல்லும் திறமையும் மட்டுமே இருந்தால் போதுமானது.

இந்த ஒருரீல் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் தேவையில்லை என்பதுடன் இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு பெற்று ஒரு இடத்தில் திரையிடப்பட்டால் கூட உலக அளவில் புகழும் கிடைத்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன.

பிரமிட் சாய்மீராவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

வளரும் துப்பாக்கி கலாச்சாரம்

இளைஞர்களிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் குர்கான் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் சக மாணவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பாக செவ்வாய்கிழமை மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த முறை பள்ளித் தோழர்கள் சுட்டதில் பொறியியல் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மாணவர்ளின் நடவடிக்கைகள் பிடிக்காததால் விலகிச் சென்ற அனுஜ் என்ற மாணவன் சுடப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆயுதமேந்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விரிவாக சம்பந்தப்பட்டவர்கள் அலசி ஆராய வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வன்முறையையும் வக்கிர புத்தியையும் அதிகரிக்கும் வகையில் பரவி வருகிறது. குறிப்பாக ஜெடிக்ஸ், போகோ போன்ற சேனல்கள் இதில் முன்னிலை பெற்றுள்ளன.

இவற்றை பார்க்கும் மாணவர்கள் தங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் ஹீரோக்களாக கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேனல்கள் குழந்தைகளை சீரழிக்கின்றன என்றால் தமிழில் உள்ள தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்கள் குடும்ப வன்முறைகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இதுபற்றி கவலை தெரிவித்த அவர், தம் வீட்டில் யாரும் மெகா சீரியல்கள் பார்க்கக்கூடாது என 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறினார்.

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தங்களுக்கு யாரால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படுமோ என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர்.

நம் நாட்டிலும் இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற அச்ச உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டிய அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது.

விழித்துக் கொள்ளாவிட்டால் எதிர்கால இந்தியா கேள்விக்குறியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும்

Monday, December 24, 2007

பணிந்தார் படாவி

மலேசியாவில் கோயில்கள் இடிக்கப்படுவதையும் அங்குள்ள இந்தியர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதை கண்டித்தும் இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி கிட்டியுள்ளது.

மலேசியாவில் 150 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

ஆனால் மலேசியாவில் உள்ள அரசு வளர்ச்சித் திட்டங்களை காரணமாக காட்டி அந்தக் கோயில்களை இடித்து வருகின்றன. இதனை எதிர்த்து அங்குள்ள இந்தியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மலேசியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள புத்ர ஜெயா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 50 கூட கிடையாது.
ஆனால் தற்போது இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு அந்நாட்டு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்து நடவடிக்கை குழுவின் தலைவர் வேதா மூர்த்தியை நான் சந்தித்துப் பேசிய போது அவரை நான் மலேசியாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவரை முதன்முறையாக சந்தித்ததை நினைவு கூர்ந்தபோது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வேதா மூர்த்தியும் தற்போது அங்கு பெருகியிருக்கும் ஆதரவு பற்றி குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் போதிலும் (உதாரணம் சன் நியூஸ் தலைக்காட்சி நேருக்கு நேர் நடத்தும் வீரபாண்டியன்) உலகம் முழுவதும் இந்து உரிமை நடவடிக்கை குழுவின் போராட்டத்திற்கு ஆதரவு கிட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது.

அதன் காரணமாக மலேசிய அரசு தற்போது சற்று பணியத் தொடங்கியிருப்பதாக தோன்றுகிறது. மnசிய பிரதமர் படாவி கோயில்களை இடிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காக கோயில்களை இடிக்கும் நிலை ஏற்பட்டால் அதுபற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தி அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதற்கான பொறுப்பை மலேசிய இந்தியரான அமைச்சர் டத்தோ சாமிவேலுவிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்து உரிமை நடவடிக்கை குழுவின் முயற்சிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது என்றே கூறலாம்.

கருணாநிதியின் வக்காளத்து

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி அதை பெருமையாக போற்றிப் பேசி பெருமைப்பட்டுக் கொள்வதும், தோல்வி அடைந்த கட்சி அதை சமாளிக்கும் வகையில் பேசிக் கொள்வதும் இயல்புதான்.

குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள போதிலும் முன்பு இருந்ததை விட அக்கட்சி குறைவான இடங்களையே பெற்றுள்ளது. எனினும் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கப்பட்டது போலவே தோல்வியை சந்தித்துள்ள போதிலும் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 8 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.

அக்கட்சியும் தோல்வியை ஒப்புக் கொள்வதாக கூறியிருப்பதுடன் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ, காங்கிரஸ் கட்சிக்கு வக்காளத்து வாங்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். முந்தைய தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத் தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றால் உடனே சதவிகித கணக்கை காட்டுவதும், அதிக இடங்கள் கிடைத்தால் உடனே வெற்றி என்று பெருமிதப்படுவதும் திராவிடக் கட்சிகளுக்கே கைவந்த கலை. அதைத் தொன் தற்போது காங்கிரஸ் கட்சி விஷயத்திலும் கருணாநிதி கையாண்டு இருக்கிறார்.

Sunday, December 16, 2007

விவசாயிகளுக்கு கலாம் கோரிக்கை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விளைநிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் என்ற போதிலும், அவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்குவதை விட அந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சொந்த நிலம் இல்லாமல் எந்த விவசாயியும் இருக்கக் கூடாது என தாம் விரும்புவதாகவும், தாமும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகவும் கலாம் கூறினார்.

புனேவில் 120 விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு அடிப்படை கட்டுமான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதை உதாரணமாக சுட்டிக்காட்டிய கலாம் இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.