Wednesday, January 2, 2008

கலாசாரமா? காட்டுமிராண்டித்தனமா?


மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுவது நாகரீகம் என்று பலரும் வக்காலத்து வாங்கி வரும் நிலையில் சமீப காலமாக நிகழும் சம்பவங்கள் அநாகரீகமானது மட்டுமல்ல. காட்டுமிராண்டித்தனமானதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 1ந் தேதி கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பலரும் மதுபானம் அருந்தி உற்சாக நடனமாடியபோது மேடை சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்க எண்ணி இவர்கள் நடத்திய கொண்டாட்டம் அவர்களது புத்தாண்டு தொடக்கத்தை சோகமாக மாற்றி விட்டது.

இந்த சம்பவத்தை மிஞ்சும் வகையில் மும்பையில் நிகழ்ந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு பெண்கள் காமக் கொடூரர்களால் மானபங்கப்படுத்தப் பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை கொண்டாடி விட்டு இரண்டு பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் இருவருடன் நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு வெளியே வந்தனர்.அங்கிருந்து அவர்கள் மும்பையில் உள்ள ஜூகு பீச் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் அந்த இரண்டு பெண்களையும் கேலி செய்தபடி சில்மிஷம் செய்ய தொடங்கி உள்ளனர்.உடனே ஒரு பெண் கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அதற்குள் கூட்டம் இரண்டு மடங்காக அதிகரித்தது.அனைவரும் அந்த பெண்களை இழுத்துச் சென்று கும்பலாக மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.


அந்த கும்பல் ஒரு பெண் அணிந்திருந்த கருப்பு நிற ஆடையை கிழித்தது.கும்பலில் இருந்தவர்கள் தள்ளி விட்டதில் அந்த பெண் கீழே விழுந்தார். உடனே அவர் மீது சிலர் வேண்டுமென்றே விழுந்துள்ளனர்.

இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் சம்பவத்தை பார்த்து திடுக்கிட்டார்.

உடனடியாக அந்த வழியாக சென்ற போலீஸ் வேன் ஒன்றை நிறுத்தி புகார் செய்துள்ளார்.போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அங்கு சென்று அநாகரீகமான செயலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போலீஸ் காரரையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் காமவெறியுடன் செயல்பட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்த காவல் துறை இன்ஸ்பெக்டர் அமர்ஜீத் சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள புகழ் பெற்ற "கேட் வே ஆப் இந்தியா' பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒரு பெண் மானபங்கப் படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.


ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அநாகரீகமான, காட்டுமிராண்டித் தனமான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருப்பது பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டின் உயரிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களிடையே கவலையை அதிகரிக்க செய்துள்ளது.

http://www.maalaisudar.com/newsindex.php?id=7233%20&%20section=20

No comments: