Wednesday, December 26, 2007

குறும்படங்களுக்கு எதிர்காலம்

சீறிப்பாய்ந்தும் பறந்து பறந்தும் சண்டை போடும் ஹீரோ, மரங்களை சுற்றிச் சுற்றி வந்து அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடும் கதாநாயகி என நமது பொன்னான நேரத்தில் இரண்டரை மணி நேரத்தை சுரண்டித் தின்னும் திரைப்படங்கள் போரடித்துவிட்டதா?

ஒரே கதையை மாற்றி மாற்றி சொல்லி வரும் வழக்கமான மசாலாப் படங்களில் இருந்து விடுதலையே கிடையாதா என்ற ஏக்கத்திற்கு தீர்வு கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரே ரீலில் கதை சொல்லும் குறும்படங்கள் விரைவில் படையெடுக்கப் போகிறது. இதற்கு புண்ணியம் கட்டிக் கொள்ள முன்வந்திருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

திரைப்படத் துறையில் பல புதுமைகளை புகுத்தி வரும் இத்திரைப்பட நிறுவனம் இதுபோன்ற ஒரு ரீல் திரைப்படங்களை தயாரிக்க நிதி கொடுப்பதோடு உலகம் முழுவதும் செயற்கைக் கோள் மூலம் அவற்றை திரையரங்குகளில் திரையிடவும் முன்வந்துள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக எழுத்தாளர் ஞானியின் 6 குறும்படங்களை அந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஞானி (அவரைப் பற்றி எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் உண்டு என்ற போதிலும் நிச்சயம் அவர் சமூக அக்கறை கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை) இயக்கத்தில் ஆறு குறும்படங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.

இதுபோன்ற குறும்படங்களை உருவாக்க ஷங்கரைப் போலவோ மணிரத்தினத்தைப் போலவோ பெரிய தொழில்நுட்ப ஞானம் எதுவும் தேவையில்லை. மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்துக்களும் அதை சுவாரஸ்யத்துடன் சொல்லும் திறமையும் மட்டுமே இருந்தால் போதுமானது.

இந்த ஒருரீல் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் தேவையில்லை என்பதுடன் இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு பெற்று ஒரு இடத்தில் திரையிடப்பட்டால் கூட உலக அளவில் புகழும் கிடைத்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன.

பிரமிட் சாய்மீராவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

No comments: