Wednesday, December 26, 2007

குறும்படங்களுக்கு எதிர்காலம்

சீறிப்பாய்ந்தும் பறந்து பறந்தும் சண்டை போடும் ஹீரோ, மரங்களை சுற்றிச் சுற்றி வந்து அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடும் கதாநாயகி என நமது பொன்னான நேரத்தில் இரண்டரை மணி நேரத்தை சுரண்டித் தின்னும் திரைப்படங்கள் போரடித்துவிட்டதா?

ஒரே கதையை மாற்றி மாற்றி சொல்லி வரும் வழக்கமான மசாலாப் படங்களில் இருந்து விடுதலையே கிடையாதா என்ற ஏக்கத்திற்கு தீர்வு கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரே ரீலில் கதை சொல்லும் குறும்படங்கள் விரைவில் படையெடுக்கப் போகிறது. இதற்கு புண்ணியம் கட்டிக் கொள்ள முன்வந்திருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

திரைப்படத் துறையில் பல புதுமைகளை புகுத்தி வரும் இத்திரைப்பட நிறுவனம் இதுபோன்ற ஒரு ரீல் திரைப்படங்களை தயாரிக்க நிதி கொடுப்பதோடு உலகம் முழுவதும் செயற்கைக் கோள் மூலம் அவற்றை திரையரங்குகளில் திரையிடவும் முன்வந்துள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக எழுத்தாளர் ஞானியின் 6 குறும்படங்களை அந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஞானி (அவரைப் பற்றி எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் உண்டு என்ற போதிலும் நிச்சயம் அவர் சமூக அக்கறை கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை) இயக்கத்தில் ஆறு குறும்படங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.

இதுபோன்ற குறும்படங்களை உருவாக்க ஷங்கரைப் போலவோ மணிரத்தினத்தைப் போலவோ பெரிய தொழில்நுட்ப ஞானம் எதுவும் தேவையில்லை. மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்துக்களும் அதை சுவாரஸ்யத்துடன் சொல்லும் திறமையும் மட்டுமே இருந்தால் போதுமானது.

இந்த ஒருரீல் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் தேவையில்லை என்பதுடன் இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு பெற்று ஒரு இடத்தில் திரையிடப்பட்டால் கூட உலக அளவில் புகழும் கிடைத்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன.

பிரமிட் சாய்மீராவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

வளரும் துப்பாக்கி கலாச்சாரம்

இளைஞர்களிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் குர்கான் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் சக மாணவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பாக செவ்வாய்கிழமை மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த முறை பள்ளித் தோழர்கள் சுட்டதில் பொறியியல் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மாணவர்ளின் நடவடிக்கைகள் பிடிக்காததால் விலகிச் சென்ற அனுஜ் என்ற மாணவன் சுடப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆயுதமேந்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விரிவாக சம்பந்தப்பட்டவர்கள் அலசி ஆராய வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வன்முறையையும் வக்கிர புத்தியையும் அதிகரிக்கும் வகையில் பரவி வருகிறது. குறிப்பாக ஜெடிக்ஸ், போகோ போன்ற சேனல்கள் இதில் முன்னிலை பெற்றுள்ளன.

இவற்றை பார்க்கும் மாணவர்கள் தங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் ஹீரோக்களாக கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேனல்கள் குழந்தைகளை சீரழிக்கின்றன என்றால் தமிழில் உள்ள தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்கள் குடும்ப வன்முறைகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இதுபற்றி கவலை தெரிவித்த அவர், தம் வீட்டில் யாரும் மெகா சீரியல்கள் பார்க்கக்கூடாது என 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறினார்.

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தங்களுக்கு யாரால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படுமோ என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர்.

நம் நாட்டிலும் இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற அச்ச உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டிய அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது.

விழித்துக் கொள்ளாவிட்டால் எதிர்கால இந்தியா கேள்விக்குறியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும்

Monday, December 24, 2007

பணிந்தார் படாவி

மலேசியாவில் கோயில்கள் இடிக்கப்படுவதையும் அங்குள்ள இந்தியர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதை கண்டித்தும் இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி கிட்டியுள்ளது.

மலேசியாவில் 150 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

ஆனால் மலேசியாவில் உள்ள அரசு வளர்ச்சித் திட்டங்களை காரணமாக காட்டி அந்தக் கோயில்களை இடித்து வருகின்றன. இதனை எதிர்த்து அங்குள்ள இந்தியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மலேசியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள புத்ர ஜெயா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 50 கூட கிடையாது.
ஆனால் தற்போது இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு அந்நாட்டு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்து நடவடிக்கை குழுவின் தலைவர் வேதா மூர்த்தியை நான் சந்தித்துப் பேசிய போது அவரை நான் மலேசியாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவரை முதன்முறையாக சந்தித்ததை நினைவு கூர்ந்தபோது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வேதா மூர்த்தியும் தற்போது அங்கு பெருகியிருக்கும் ஆதரவு பற்றி குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் போதிலும் (உதாரணம் சன் நியூஸ் தலைக்காட்சி நேருக்கு நேர் நடத்தும் வீரபாண்டியன்) உலகம் முழுவதும் இந்து உரிமை நடவடிக்கை குழுவின் போராட்டத்திற்கு ஆதரவு கிட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது.

அதன் காரணமாக மலேசிய அரசு தற்போது சற்று பணியத் தொடங்கியிருப்பதாக தோன்றுகிறது. மnசிய பிரதமர் படாவி கோயில்களை இடிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காக கோயில்களை இடிக்கும் நிலை ஏற்பட்டால் அதுபற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தி அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதற்கான பொறுப்பை மலேசிய இந்தியரான அமைச்சர் டத்தோ சாமிவேலுவிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்து உரிமை நடவடிக்கை குழுவின் முயற்சிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது என்றே கூறலாம்.

கருணாநிதியின் வக்காளத்து

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி அதை பெருமையாக போற்றிப் பேசி பெருமைப்பட்டுக் கொள்வதும், தோல்வி அடைந்த கட்சி அதை சமாளிக்கும் வகையில் பேசிக் கொள்வதும் இயல்புதான்.

குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள போதிலும் முன்பு இருந்ததை விட அக்கட்சி குறைவான இடங்களையே பெற்றுள்ளது. எனினும் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கப்பட்டது போலவே தோல்வியை சந்தித்துள்ள போதிலும் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 8 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.

அக்கட்சியும் தோல்வியை ஒப்புக் கொள்வதாக கூறியிருப்பதுடன் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ, காங்கிரஸ் கட்சிக்கு வக்காளத்து வாங்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். முந்தைய தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத் தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றால் உடனே சதவிகித கணக்கை காட்டுவதும், அதிக இடங்கள் கிடைத்தால் உடனே வெற்றி என்று பெருமிதப்படுவதும் திராவிடக் கட்சிகளுக்கே கைவந்த கலை. அதைத் தொன் தற்போது காங்கிரஸ் கட்சி விஷயத்திலும் கருணாநிதி கையாண்டு இருக்கிறார்.

Sunday, December 16, 2007

விவசாயிகளுக்கு கலாம் கோரிக்கை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விளைநிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் என்ற போதிலும், அவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்குவதை விட அந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சொந்த நிலம் இல்லாமல் எந்த விவசாயியும் இருக்கக் கூடாது என தாம் விரும்புவதாகவும், தாமும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகவும் கலாம் கூறினார்.

புனேவில் 120 விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு அடிப்படை கட்டுமான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதை உதாரணமாக சுட்டிக்காட்டிய கலாம் இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

சந்தி சிரிக்கும் சந்திப்பு

தமிழ்நாடு காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமியும், அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் வாசனும் இன்று காலை சந்தித்துக் கொண்டதாக மாலைச்சுடர் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏதோ அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்துக் கொண்டதைப் போலவும், அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் திடீரென்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியது போலவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைப்போல் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி போய்க் கொண்டிருக்கும் பரிதாபகரமான நிலையை எடுத்துக் காட்டுவதாகவே இந்த செய்தி அமைந்துள்ளது. ஒரே கட்சியை சேர்ந்த இருவர் சந்தித்துக் கொள்வது பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வெளியிடும் அளவுக்கு கட்சியின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காங்கிரஸ் சட்சியின் தலைவர் சோனியா மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது என்று பெருமிதத்துடன் கூறிவருகிறhர்.

முதலில் தங்கள் கட்சியில் உள்ள தலைவர்களிடையே குறிப்பாக தமிழகத் தலைவர்களிடையே காணப்படும் இந்தப் பாராமுகப் போக்கை சரிசெய்ய சோனியா முதலில் ஏதாவது செய்யட்டும். அதன் பின்னர் நாட்டு மக்களை ஒருங்கணைப்பது பற்றி யோசிக்கட்டும்

http://www.maalaisudar.com/

காந்திருந்த கலாம்

குடியரசுத் தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றி இந்தியாவின் வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த கலாம் குடியிருப்பதற்கான வீட்டை ஒதுக்கித் தர அவரை நான்கு மாதங்கள் காத்திருக்க வைத்துள்ளது மத்திய அரசு.
குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் தலைநகர் டெல்லியில் தங்கியிருக்க விரும்பினால் அவருக்கு வீடு ஒதுக்கித் தரப்பட வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடியரத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற கலாம் டெல்லியில் தங்கியிருக்க விரும்பியதைத் தொடர்ந்து ராஜாஜி சாலையில் அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த வீடு ப]துப்பிக்கப்பட வேண்டியதால் தற்காலிகமாக அவர் ராஹவத்திற்கு சொந்தமான வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கலாம் அந்த வீட்டில் நீண்டநாள் தங்கியிருப்பது ஆபத்தானது என்று அவரது தரப்பில் இருந்து பல முறை அரசுக்கு எடுத்துக் கூறப்பட்ட போதிலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு நான்கு மாதத்திற்குப் பிறகே அவரிடம் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியசசுத் தலைவராக இருந்து இந்தியாவை 2020ல் வல்லரசாக மாற்ற கனவ] கண்டதுடன் அதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் பணியில் குடியரசுத்தலைவராக இருந்த போது மட்டுமின்றி தற்போதும் ஊக்குவிப்ப] பணியில் ஈடுபட்டு வரும் கலாமுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களுக்கு ஆற்ற வேண்டிய திட்டங்களை மத்திய அரசு எவ்வளவ] முனைப்ப]டன் செயல்படுத்தும் என்பது காங்கிரசுக்கே வெளிச்சம்

Saturday, December 15, 2007

தமிழ் பெண்ணின் இமாலய சாதனை

மிகப்பெரிய சாதனை படைத்தவர்களை இமாலய சாதனை படைத்திருப்பதாக கூறுவது வழக்கம். ஆனால் மும்பையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பிரியதர்ஷினி இமய மலையில் நடத்தப்பட்ட இமாலயன் ரேஸ் எனப்படும் அல்ட்ரா மராத்தான் போட்டியில் பங்கேற்று முழு ஓட்டத்தையும் நிறைவு செய்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
.
கடந்த 16 ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் போட்டிதான் இமாலயன் ரேஸ் எனப்படும் இமயமலை மராத்தான் ஓட்டப் பந்தயம். இந்த ஆண்டு இப்போட்டி கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் 5 நாட்கள் நடத்தப்பட்டன.உலகம் முழுவதிலும் இருந்தும் 69 வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். 15 பெண்கள் உட்பட 50 பேர் இந்த ஓட்டத்தை முழுவதும் ஓடி நிறைவு செய்தனர். இவர்களில் மும்பையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பிரிதர்ஷினியும் ஒருவராவார்.பொதுவாக மராத்தான் போட்டிகளில் 26 மைல்கள் ஓட வேண்டும். ஆனால் அல்ட்ரா மராத்தான் எனப்படும் இமாலய ஓட்டம் போன்ற போட்டிக ளில் ஓட வேண்டிய தூரம் 100 மைல்கள் ஆகும். குறைந்த அளவிலேயே மராத்தான் போட்டிகளில் ஓடும் பயிற்சி மேற்கொண்டுள்ள போதிலும் நம்பிக்கையுடன் இவர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஓட்டத்தின் முதல் நாள் ஓட்டம் 6600 அடி உயரத்தில் தொடங்கி 12,000 அடி உயரத்தில் முடிந்தது. 8 டிகிரி தட்பவெப்ப நிலையில் முதல் நாளில் 24 மைல்கள் ஓடியபோதே தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிட்டதாக தனது அனுபவத்தை பிரியதர்ஷினி விவரிக்கிறார்.10 ஆயிரம் அடி உயரத்தில் ஓடிக் கொண்டிருந்த போது பனி மூட்டத் தின் இடையே இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரை சந்தித்த அனுபவத்தை மறக்க இயலாது என்று கூறும் அவர், இந்த ஓட்டத்தில் இந்தியரான தாம் ஓடுவதைப் பார்த்த அவர்கள் இந்தியா சக் டே என்ற உரக்க கோஷமிட்டு வாழ்த்தியபோது, போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று மனதின் ஓரத்தில் தோன்றிய எண்ணம் மறைந்து புதிய உற்சாகம் தொற்றிக் கொண்டதாக கூறுகிறார்.இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் எட்ட வேண்டிய தொலைவை எட்டிவிட்ட போதிலும் பிரிய தர்ஷினிக்கு இடையூறுகள் முழங்கால் வலி வடிவத்தில் வந்துள்ளது.முழங்காலின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்ட அவரை போட்டி ஏற்பாட்டாளர்கள் விலகிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனாலும் பிடிவாதமாக உயிரே போனாலும் போட்டியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று தீவிரமாக ஓடி இமாலய ஓட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார் பிரியதர்ஷினி.மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கையை இந்தப் போட்டி அளித்திருப்பதாக கூறும் அவர், வருங்காலங்களில் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் மராத்தான் போட்டிகளில் மட்டுமின்றி சவால்கள் மிகுந்த அல்ட்ரா மராத்தான் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதாக கூறுகிறார்.

Wednesday, December 12, 2007

சங்கி

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனில் புதிதாக சங்கி என்ற பெயரில் வலைப்பதிவு ஒன்றை தொடங்கியிருக்கிறேன். விரைவில் பல்வேறு கருத்துக்களுடன் அனைவரையும் சந்திப்பேன்.
சங்கி