Wednesday, December 26, 2007

வளரும் துப்பாக்கி கலாச்சாரம்

இளைஞர்களிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் குர்கான் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் சக மாணவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பாக செவ்வாய்கிழமை மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த முறை பள்ளித் தோழர்கள் சுட்டதில் பொறியியல் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மாணவர்ளின் நடவடிக்கைகள் பிடிக்காததால் விலகிச் சென்ற அனுஜ் என்ற மாணவன் சுடப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆயுதமேந்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விரிவாக சம்பந்தப்பட்டவர்கள் அலசி ஆராய வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வன்முறையையும் வக்கிர புத்தியையும் அதிகரிக்கும் வகையில் பரவி வருகிறது. குறிப்பாக ஜெடிக்ஸ், போகோ போன்ற சேனல்கள் இதில் முன்னிலை பெற்றுள்ளன.

இவற்றை பார்க்கும் மாணவர்கள் தங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் ஹீரோக்களாக கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேனல்கள் குழந்தைகளை சீரழிக்கின்றன என்றால் தமிழில் உள்ள தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்கள் குடும்ப வன்முறைகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இதுபற்றி கவலை தெரிவித்த அவர், தம் வீட்டில் யாரும் மெகா சீரியல்கள் பார்க்கக்கூடாது என 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறினார்.

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தங்களுக்கு யாரால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படுமோ என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர்.

நம் நாட்டிலும் இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற அச்ச உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டிய அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது.

விழித்துக் கொள்ளாவிட்டால் எதிர்கால இந்தியா கேள்விக்குறியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும்

No comments: