Monday, December 24, 2007

பணிந்தார் படாவி

மலேசியாவில் கோயில்கள் இடிக்கப்படுவதையும் அங்குள்ள இந்தியர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதை கண்டித்தும் இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி கிட்டியுள்ளது.

மலேசியாவில் 150 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

ஆனால் மலேசியாவில் உள்ள அரசு வளர்ச்சித் திட்டங்களை காரணமாக காட்டி அந்தக் கோயில்களை இடித்து வருகின்றன. இதனை எதிர்த்து அங்குள்ள இந்தியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மலேசியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள புத்ர ஜெயா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 50 கூட கிடையாது.
ஆனால் தற்போது இந்து உரிமை நடவடிக்கை குழு நடத்தி வரும் போராட்டத்திற்கு அந்நாட்டு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்து நடவடிக்கை குழுவின் தலைவர் வேதா மூர்த்தியை நான் சந்தித்துப் பேசிய போது அவரை நான் மலேசியாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவரை முதன்முறையாக சந்தித்ததை நினைவு கூர்ந்தபோது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வேதா மூர்த்தியும் தற்போது அங்கு பெருகியிருக்கும் ஆதரவு பற்றி குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் போதிலும் (உதாரணம் சன் நியூஸ் தலைக்காட்சி நேருக்கு நேர் நடத்தும் வீரபாண்டியன்) உலகம் முழுவதும் இந்து உரிமை நடவடிக்கை குழுவின் போராட்டத்திற்கு ஆதரவு கிட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது.

அதன் காரணமாக மலேசிய அரசு தற்போது சற்று பணியத் தொடங்கியிருப்பதாக தோன்றுகிறது. மnசிய பிரதமர் படாவி கோயில்களை இடிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காக கோயில்களை இடிக்கும் நிலை ஏற்பட்டால் அதுபற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தி அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதற்கான பொறுப்பை மலேசிய இந்தியரான அமைச்சர் டத்தோ சாமிவேலுவிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்து உரிமை நடவடிக்கை குழுவின் முயற்சிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது என்றே கூறலாம்.

No comments: